

தேசிய ட்ராப் ரோபால் (Drop Roball) போட்டியில் விளையாட, சரவணம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் மூவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (எஸ்ஜிஎஃப்ஐ) சார்பில் புதிய விளையாட்டுகள் குறித்த பயிற்சி முகாம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கலந்து கொண்ட சரவணம் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மூவர், ட்ராப் ரோபால் என்ற புதிய விளையாட்டுக்கு தகுதிபெற்று, தேசியட்ராப் ரோபால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி இப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் திவ்யா, மரிய ஜாஸ்மின ஆகியோர் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடவும், 10-ம் வகுப்பு மாணவி ஆராதனா தாஸ் 19 வயதுக்கு உட்பட் டோருக்கான போட்டியில் விளையாடவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஜனவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சண்டிகரில் நடைபெறும் தேசிய அளவிலான ட்ராப் ரோபால் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடுகின்றனர்.
இம்மாணவிகளை எஸ்எஸ் குளம் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன், உடற் கல்வி ஆசிரியர் கே.செந்தில் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.