

தங்களுக்கு கல்வி அளித்து ஆளாக்கிய திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் பல்வேறு உதவிகளை வழங்கினர்.
திருப்பூர் காதர்பேட்டை அருகே நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1999 – 2000-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பழைய மாணவர்கள் தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 20 ஆண்டுகளில் தங்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி அளவளாவினர்.
முன்னாள் மாணவர்கள் கடிகாரம் மற்றும் மின்விசிறிகள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கினர். அவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்று கொண்டனர்.
மேலும் இச்சந்திப்பில், ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்தித்து பள்ளி வளர்ச்சிக்கு உதவுவது, தங்களுடன் பள்ளியில் படித்து தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சக நண்பர்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.