கோவை மாவட்டம் வெள்ளலூர் சிறப்புப் பள்ளியில் கல்வி பயிலும் வடமாநில குழந்தைகள்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் சிறப்புப் பள்ளியில் கல்வி பயிலும் வடமாநில குழந்தைகள்.

வடமாநில குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கோவை பள்ளி

Published on

த.சத்தியசீலன்

வடமாநில குழந்தைகளுக்கு கோவை யில் செயல்படும் சிறப்பு பள்ளி மறுவாழ்வு அளித்து வருகிறது. குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், தேசியக் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கை மேம்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகள் போன்றவற்றில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள், வீதிகளில் கையேந்தும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு கல்வி,இருப்பிடம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும்இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படு கின்றன.

இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து தங்கள் குடும்பத்தினருடன் வேலைக்காக ஏராளமான தொழி லாளர்கள் கோவைக்கு குடிபெயர்ந்து பெயர்ந்து வருகின்றனர். மேற்குவங்ம், பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவையில் உள்ள ஆலைகள், கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் குழந்தைகள் படிக்கச் செல்வதில்லை.

கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்கள் என்றநிலையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வி கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்திலேயே பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர்,அலுவலக உதவியாளர் மற்றும் சமையலர் என 3 பேர் பணியாற்றி வருகின்றனர். வடமாநில குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஹிந்தி உள்படஅனைத்துப் பாடங்களும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

படிப்பு மட்டுமின்றி ஓவியம், கைவினைப் பொருள்கள் தயாரிப்புஉள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இவர்கள் படிப்பைக் காட்டி லும் ஓவியம் வரைதல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல் ஆகியவற்றில் அதிக ஆர்வமாக உள்ளனர்.

இது குறித்து தேசிய குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வெள்ளலூர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ர.கார்த்திகா கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குழந்தைகளை அனுப்ப மறுத்தனர்.

தொடர்ந்து கல்வியின் அவசியம் குறித்தும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர். ஆரம்பத்தில் 10 குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். தற்போது, 23 மாணவர்கள், 22 மாணவிகள் கல்வி கற்கின்றனர்.

ஆரம்பத்தில் சுகாதாரமான பழக்கவழக்கங்கள், தூய்மையாக இருப்பதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன்பின்னர் மற்ற பள்ளிமாணவர்களைப் போல் சீருடைகள் அணிந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தினோம். தற்போது குழந்தைகள் தலைவாரி, நேர்த்தியாக சீருடை அணிந்து மற்ற மாணவர்களைப் போல் பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. தவிர சீருடை, புத்தகப் பை, புத்தகம், நோட்டு உள்பட அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. திருக்குறள், ஆத்திச்சூடி ஆகிய பாடல்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கின்றனர்.

மற்ற பாடங்களைக் காட்டிலும் தமிழ் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாடங்களைத் தவிர்த்து கைவினைப் பொருள்கள், ஓவியம் வரைதல், காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவர்களிடம் அன்பாக எடுத்துக் கூறுவதால், எளிதாக புரிந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். த.சத்தியசீலன்


X
Hindu Tamil Thisai
www.hindutamil.in