

கோவை, பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள 8 மையங்களில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வெழுத கோவை மாவட்ட தனித்தேர்வர்கள் இன்று (ஜன. 6) முதல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் கோவை மாவட்ட உதவி இயக்குநர் ஆர்.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு தேர்வுகள் துறை சார்பில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வரும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அதே பாடத்திட்டத்தில் தேர்வெழுதலாம். நேரடி தனித்தேர்வர்கள் 1.3.2020 அன்று 14.5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 9-ம் வகுப்பு பயின்று இடைநின்றவர்களாக இருக்க வேண்டும். மறுமுறை தேர்வெழுதுபவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, தனித்தேர்வர்களாக பழைய பாடத் திட்டத்திலேயே தேர்வெழுதலாம். தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி கோவையில் ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சியில் நகரவை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் ஜன. 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணமாக ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.50 என மொத்த ரூ.175 செலுத்த வேண்டும். ஒரு பாடத்துக்கு விண்ணப்பித்தாலும், ஐந்து பாடங்களுக்கு விண்ணப்பித்தாலும் இதே கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.