

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்ற தேசிய கல்லூரி விளையாட்டு அகாடமியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
திருச்சி மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு அகாடமியில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.
மாணவிகள் எஸ்.வி.ஸ்ரீலட்சுமி, ஆர்.டி.பிரியதர்ஷினி ஆகியோர் முதல் பரிசையும், ஆர்.டி.திருமாறன் 2-ம் பரிசையும், பி.ஆர்.பிரஜேஷ் ஆரியா, எஸ்.கோகுல்நாத் ஆகியோர் 3-ம் பரிசையும், எஸ்.எம்.சர்வேஸ்வரன் 4-ம் பரிசையும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வர் ஆர்.சுந்தரராமன், உடற்கல்வி இயக்குநர் டாக்டர் டி.பிரசன்ன பாலாஜி, உடற்கல்வி அறிவியல் துறை உதவி பேராசிரியர் டி.பூபதி ஆகியோர் நேற்று பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்த மாணவர்கள் வரும் பிப்ரவரி 16, 17-ம் தேதிகளில் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.