

திருச்சி பள்ளியில் நடைபெற்ற பாரதியார் விழாவில் குழந்தைகள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
6, 7, 8-ம் வகுப்புக்கு ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் முதல் 3 இடங்களைப் பிடித்த 120 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை இ.ஆர்.மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா, முன்னாள் மாணவர் கே.மது ஆகியோர் வழங்கினர்.
நூல் வெளியீடு
விழாவின் முக்கிய நிகழ்வாக, விடுதலைப் போரில் தமிழ் சமூகம் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது. சமுதாயநல்லிணக்கப் பேரவை அமைப்பாளர் ராஜ.முருகானந்தம் புத்தகத்தை வெளியிட, பள்ளியின் முன்னாள் மாணவர் பி.அர்ஜூனன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.சந்திரன் வரவேற்றார். நிறைவாக, உதவி தலைமை ஆசிரியர் எம்.என்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை சாதனா அறக்கட்டளை அறங்காவலர்கள் அரங்க.வரதராஜன், வி.ஜம்புநாதன் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.