

சின்னாளப்பட்டியில் நடந்த தென்னிந் திய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக மாணவிகள் கோப்பையைக் கைப்பற்றினர்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் தென்னிந்திய அளவில்14 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கான ரோல்பால் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன.
ஆண்கள் பிரிவில் ஆறு மாநில அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில் கேரளா அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. தமிழக அணி இரண்டாம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. கேரள மாநில அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷன் மாநிலச் செயலாளர் எம்.பி.சுப்பிரமணியன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் சங்கச் செயலாளர் எம்.பிரேம்நாத், நிர்வாகக் குழு உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.