

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியத் திருவிழாவில், பயனற்ற பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், கார்ட்டூன் வரைதல் போட்டிகளில் நெல்லை மாவட்ட மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாநில அளவிலான ஓவியத் திருவிழா மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆலோசகர் வி.ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பயனற்ற பொருட்கள் மூலம் கலைப் பொருட்கள் உருவாக்கும் போட்டியும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டியும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சேகர் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 128 மாணவர்கள் கலந்து கொண்டனர். பயனற்ற பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சுந்தர்செல்வன் முதல் பரிசும், தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.நிவேதா இரண்டாம் பரிசும், விழுப்புரம் மாவட்டம் இலவஞ்சூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.வெங்கடேஷ், திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சுதர்சன் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
அதேபோல், கார்ட்டூன் வரையும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் முறஞ்சிபட்டியைச் சேர்ந்த குருசங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.மாடசாமி முதல் பரிசும், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.அருண் இரண்டாம் பரிசும், தஞ்சாவூர் மாவட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.பிரியதர்சினி, காரைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.கோபி கிருஷ்ணன் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் அந்த மாணவர்களின் பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.