

மண்டல அளவிலான கராத்தே போட்டியில் ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அளவிலான கராத்தே போட்டி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எட்டிவாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். கராத்தே போட்டியில் பங்கேற்ற ஹேமலதா, தீபா, மோனிகா, கவிதா ஆகிய 4 மாணவிகள் முதலிடத்தையும், வைஷ்ணவி என்ற மாணவி 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் திருக்குறள் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வெங்கடாஜலம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உஷா, கராத்தே பயிற்சியாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.