

கோவையில் 'உயிர்' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
கோவையில் உள்ள 'உயிர்' அமைப்புசார்பில், கோவையில் உள்ள 40 பள்ளிகளில் குட்டி காப்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவம்பர் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளகங்கா மருத்துவமனை கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றகண்காட்சியில் அவை காட்சிபடுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்களை மதித்தல், ஒருவழிபாதையில் வாகனம் ஓட்டாமை, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது, சாலையை கடக்க ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டும் மக்கள் கடந்துசெல்ல வேண்டும், அதிக சுமையேற்றிச் செல்லக்கூடாது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்கக்கூடாது, வளைவுகளில் முந்திச்செல்லக்கூடாது என்பது உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியங்கள், 'ரத்ததானம் செய்ய வேண்டும்; அதை சாலைக்கு செய்யக்கூடாது' என்றவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள்இக்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, "கோவை மாநகரில் வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க மாநகரக் காவல்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். 2017-ம் ஆண்டுக்கு பிறகு மாநகரில் விபத்துகள் 43 சதவீதம் குறைந்துள்ளது. அதனால் ஏற்படும் இறப்புகள் 50 சதவீதம் குறைந்துள்ளது. குட்டி காப்ஸ் என்ற மாணவ காவலர் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
சுவிட்சர்லாந்து ஏ.ஓ. அலையன்ஸ் நிர்வாக இயக்குநர் மெட் கிளவுட் மார்ட்டின் பேசினார். பின்னர் ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சண்முகநாதன், உயிர் அமைப்பின் நிர்வாகஅறங்காவலர் டாக்டர் எஸ்.ராஜசேகரன், மணி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.