

நடப்பு கல்வி ஆண்டு (2019- 2020)முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதையொட்டி, பொதுத்தேர்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஹேப்பிடியூட்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது, ‘‘திங்கள் கிழமைதோறும் பள்ளியில் கடைபிடிக்கப்படும் பூஜ்ஜிய நேரத்தில், மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும், குதூகலமாய் இருக்கச் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உள்ளார்ந்த மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி, பொதுத் தேர்வை மகிழ்வுடன் எதிர்கொள்ள செய்வதே இதன் நோக்கமாகும்.
ஆடல், பாடல், யோகா,பொம்மலாட்டம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் கற்றல் போன்றமாணவர்களின் மகிழ்ச்சியைத் தூண்டும் விதமாக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நமது மாணவர்கள் இந்த ஆண்டுஎழுத உள்ள பொதுத்தேர்வை மகிழ்ச்சிகரமாக எதிர் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’’ என்றார்.
ஆசிரியர் பயிற்றுநர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியர்கள் மனோகர், வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். காந்திகிராமம் பள்ளிஆசிரியை திலகவதி செயல் விளக்கம் அளித்தார். பள்ளி ஆசிரியைகள் வாசுகி, மகேஸ்வரி, சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் மனோகர் நன்றி கூறினார்.