

கோவையில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு நிலவரைபட பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை மற்றும் பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு நிலவரைபடத் திறன் குறித்த பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு நிலவரைபட பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடாகம் ரோடு பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பேரூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலாண்டிபாளையம் சிந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், எஸ் எஸ் குளம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பீளமேடு ஜிஆர்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழனி கவுண்டர் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தொடங்கி வைத்தார். நிலவரைபட ஆசிரியர்களான வி.சீனிவாஸ், டி.லாவண்யா, கிரானாஜெனட், முகேஷ், சத்தியநாராயணன், காமாட்சி, செந்தில்குமார், செல்வி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சமூகஅறிவியல் ஆசிரியர்கள் அனைவரும் நிலவரைபட உத்திகளை அறிந்திருக்கவேண்டியது மிகவும் அவசியம். தற்போதைய நவீன உத்திகளை அறிமுகப்படுத்தவும், அனைத்து வகையான குறியீடுகளை குறிப்பதற்கும் நிலவரைபடத்திறன் பயிற்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்’’ என்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுலர்கள் என்.கீதா, ஆர்.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.