

பல்லலக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் வனப்பகுதிகளில் ஆயிரம் விதைப் பந்துகளை வீசினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆயிரம் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கயிலைநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் வனவர் ஹரி விதைப்பந்து வீசும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக விதை பந்து வீசுவது தொடர்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அனுசுயா விளக்கினார்.
வனப்பகுதி, ஏரிக்கரை, சாலையின் ஓரங்களில் விதைப்பந்துகள் வீசப்பட்டன. மேலும், வீடு மற்றும் தோட்டங்களில் வளர்ப்பதற்காக மாணவர்களுக்கு காய்கறி,பூக்களின் விதைகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை சாரங்கன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரவிக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.