

குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது குறித்து ஆன்லைனில் புகார் பதிவு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட கோவை மாவட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறினார்.
சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி, தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில்,குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவைஅவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பேசியதாவது:
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மாணவ, மாணவிகளும் இது தொடர்பாக விழிப்புணர்வு பெற்று, பல்வேறு தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களது பிரச்சினைகள், குறைகள் தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அப்போதுதான் அதற்குத் தீர்வுகிடைக்கும். பெற்றோரும், குழந்தைகளுடன் தினமும் பேசி, அவர்களது பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆன்லைனில் புகார் செய்யலாம்
முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு கதைகளைக் கூறுவார்கள். இப்போது கதை சொல்லல் என்பதே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை மாற வேண்டும். சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை, கதை சொல்லல் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களது பகுதியில் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பருவத்தினர் பணியில்ஈடுபடுத்தப்பட்டிருந்தால், www.pencil.
gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். 48 மணிநேரத்தில் அந்தக் குழந்தையை மீட்க,உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் ராஜா பிரபுபேசும்போது, ‘‘மாணவப் பருவத்திலிருந்தே ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்த்து,காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கை நகங்களில் உள்ள அழுக்குகள் மூலம் நோய் பரவும்வாய்ப்பு உள்ளதால், கை நகங்களைவெட்டி, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கைக்குட்டை வைத்திருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றின் மூலம் நமது உடல் நலத்தைப் பாதுகாக்கலாம்" என்றார். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.செல்வராணி வரவேற்றார். நிறைவாக, தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட அலுவலர் பிஜு அலெக்ஸ் நன்றி கூறினார்.