

‘இந்து தமிழ்’ நாளிதழ், தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை மற்றும் நாகைஇஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்கள் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆலோசனையின்படி போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், நாகை இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் சங்கர் கணேஷ் ஆகியோரது அறிவுரையின்படி பொதுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி, தினமும் 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளிகளுக்கே சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.
நவம்பர் 6,7,8-ம் தேதிகளில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 60 பள்ளிகளிலும், 11-ம் தேதி பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களில் 20 பள்ளிகளிலும் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளானநேற்று, தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 20 பள்ளிகளில் இந்த பயிற்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் அரண்மனையில் உள்ளஅரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர்டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.ராமகிருஷ்ணன், நாகை இஜிஎஸ் பிள்ளைகல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியும், பொதுத்தேர்வு குறித்த தன்னம்பிக்கை பயிற்சியையும் அளித்தனர்.
மேலும், இந்த பயிற்சியை நாகைஇஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களை சேர்ந்த இயக்குநர் டி.விஜயசுந்தரம், சிஇஓ சந்திரசேகர், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவர் டி.சுகுமார், பயிற்சியாளர்கள் கே.ராஜூ, எம்.குணாளன், பி.ஜெ.சுரேஷ்பாபு, ஜான்பவுல், ஜிம், ஆனந்தராஜ், பத்மநாதன் ஆகியோர் வழங்கினர்.
அதேபோல, காவல் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள காவல் துறையினர் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சியை வழங்கினர்.
இதுதவிர, மாணவ, மாணவி களுக்கு ‘வெற்றிக் கொடி’ நாளிதழ் வழங்கப்பட்டு, வாசிப்புத் திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.