Published : 01 Nov 2019 10:08 AM
Last Updated : 01 Nov 2019 10:08 AM

குளித்தலை பொய்யாமணியில் அரசு பள்ளியில் விரைவில் சிசிடிவி கேமரா

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது பொய்யாமணி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 182 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளின் மேம்பாட்டுக்காக பள்ளியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பள்ளியில் மாவட்டத்தில் இரண்டாவதாக ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. மேலும், இது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற பள்ளியாகும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மேம்பாட்டுக்கு, கிராம தன்னிறைவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்குநிதியை பள்ளி மூலம் செலுத்தினால் மொத்த தொகையும் விடுவிக்கப்படும்.

கணினி ஆய்வகம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்கிராம தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் பள்ளியில் 8 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது. நிகழாண்டு கிராம தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் குளித்தலை ஒன்றியத்துக்கு ரூ.4.63 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள், அனைத்து வகுப்பறைகளுக்கும் வெண்பலகை கணினி, பிரின்டர் மற்றும் பள்ளி வளாகத்தில் சிசிடிவி பொருத்துவதற்காக ரூ.4.63 லட்சத்துக்கு முன்மொழிவு மற்றும் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி ஆணை கிடைத்தவுடன் சென்னை ராதாகிருஷ்ணா சுவாமிஜி அறக்கட்டளை வழங்கும் நிதி மூலம் பள்ளி சார்பில் மூன்றில் ஒரு பங்குத் தொகையாக ரூ.1.54 லட்சம் செலுத்தப்படும். இதன் மூலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழங்கும் ரூ.4.63 லட்சம் வழங்கப்பட்டவுடன் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து பள்ளியின் பட்டதாரிஆங்கில ஆசிரியர் பூபதி கூறியபோது, "கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான ஆணை விரைவில் கிடைக்கும். நிதி வந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். கரூர் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் முதல் அரசுப் பள்ளியாக பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி திகழும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x