

பெரியகுளம் அருகே குளத்தை சுத்தப்படுத்த அரசு பள்ளி மாணவிகள் களம் இறங்கினர்.
பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக்குளம். 106 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளம் மூலம் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தாமரைக்குளம், வடுகபட்டி ஆகிய பேரூராட்சிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. சோத்துப்பாறை அணையில் இருந்துவரும் நீர், மழை நீர் ஆகியவை மூலம் தாமரைக்குளம் நிரம்புகிறது.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இக்குளத்தை சமூக ஆர்வலர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பள்ளி மாணவ,மாணவிகளும் ஒருங்கிணைந்துள்ளனர்.
பெரியகுளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி விடுமுறை நாட்களில் இங்கு வந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தூர்வாருதல், கரையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறுசேவைகளில் இவர்கள் மும்முரமாகஇறங்கினர். மாணவிகளின் களப்பணி குறித்து சில்வார்பட்டி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் சேசுராணி ஆகியோர் கூறுகையில், ‘‘இது போன்ற சமூக மேம்பாட்டுப் பணியில் மாணவ, மாணவியர் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் நீரின் அவசி யத்தை உணர்ந்து கொள்வதுடன், நீராதாரங்களைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.