

திருச்சியில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹேண்ட்பால் போட்டி மாணவர்கள் பிரிவில் கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளியும், மாணவிகள் பிரிவில் காவேரி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியும் வெற்றி பெற்றன.
திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம், கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பிரீமியர் ஆகியன இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. மாணவர்கள் பிரிவில் 12 அணிகளும், மாணவிகள் பிரிவில் 13 அணிகளும் போட்டியில் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் பிரிவில் கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. 2-ம் இடத்தை ஏர்போர்ட் எஸ்பிஐஓஏ மேல்நிலைப் பள்ளியும், 3-ம் இடத்தை கிராப்பட்டி சாந்தா மரியா மேல்நிலைப் பள்ளியும், 4-ம் இடத்தை ஏர்போர்ட் எஸ்பிஐஓஏ சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியும் பெற்றன. சிறந்த வீரராக கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.எழிலரசன், சிறந்த கோல் கீப்பராக இதே பள்ளியின் ஏ.கெல்வின் கிஷோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவிகள் பிரிவில் காவேரி குளோபல் சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பெற்றது. மேலப்புதூர் செயின்ட் ஜோசப் பெண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, ஏர்போர்ட் எஸ்பிஐஓஏ மேல்நிலைப் பள்ளி, திருச்சி காவேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன முறையே2, 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்தன.
சிறந்த வீராங்கனையாக காவேரி குளோபல் பள்ளி மாணவிஆர்.ஹோமாவதியும், சிறந்த கோல் கீப்பராக சி.ஜெனிபர் கேத்ரினும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, போட்டிகளை சவுமா ராஜரத்தினம் தொடங்கிவைத்தார். போட்டிகளில் வென்ற அணிகள், சிறந்த வீரர்- வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை ஆர்.முருகேசன் வழங்கினார். திருச்சி மாவட்ட ஹேண்ட் பால் சங்கத் தலைவர் எஸ்பி.அண்ணாமலை, செயலாளர் ஆர்.கருணாகரன், கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அல்போன்ஸ் ராஜம், ஜி.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.