

மதுரை
வாசிப்புத்திறன் மேம்பட தினமும் நாளிதழ்கள் படிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு நூலகர் அறிவுரை வழங்கினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நூலகத்தில் நூலக தினவிழா கொண்டாடப்பட்டது. விழா வுக்கு பள்ளி முதல்வர் ஜெ. ஈஸ்டர் ஜோதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளியின் நூலகர் ஆ.கண்ணகி பேசியதாவது:
இந்த நூலகம் 1997-ம் ஆண்டு 511 நூல்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 4,400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நூல்களின் விவரம் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான நூல்களை விரைவாக தேர்வு செய்து பயன்படுத்த முடிகிறது.
இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினமும் இந்து ஆங்கில நாளிதழை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்.
இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் இணைப்பிதழாக வெளிவரும் பெண் இன்று, வாகன உலகம், வணிக வீதி, வெற்றிக் கொடி, மாயா பஜார், ஆனந்த ஜோதி, இந்து டாக்கீஸ், சொந்த வீடு, உயிர் மூச்சு, நலம்வாழ என, ஒவ்வொரு தலைப்பிலும் வரும் இதழ்களை மாணவர்கள் வாசிக்க, ஏற்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் வாசிப்புத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவர்
களின் வாசிப்புத் திறன் அதிகரிக்கும் போது அவர்களின் பொது அறிவும், சிந்தனை திறனும் வளரும்.
இவ்வாறு பள்ளியின் நூலகர் ஆ.கண்ணகி பேசினார்.