

நாமக்கல்
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
கண்காட்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, வேகத்தை கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப கருவி, பேட்டரி சைக்கிள், பயன் பாடற்ற பொருட்களை பய னுள்ள பொருட்களாக மாற்று தல் என 60-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்வையிட்ட பள்ளி மாணவர்களுக்கு அக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. கண்காட்சியில் 8 தலைப்பிலான படைப்புகளில் தலா முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மு.ஆ.உதயகுமார், ரவி மற்றும் 60-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.