

விருதுநகர்
பசுமை குடில், இயற்கை எரிபொருள், பல்லுயிர் பெருக்கம், மழைநீர் சேகரிப்பு என விருதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் அசத்தினர்.
விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24-வது கலை மற்றும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் கல்விஅலுவலர் சுப்பிரமணியன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். இதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவிகள் ஆடை வடிவமைப்பு, இயற்கை எரிபொருள், மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர் பன்மை பாதுகாப்பு, கணித முறைகள், இயற்பியல் ஆய்வு முறைகள், பருவநிலை மாற்றம்,ஆற்றல் பிரமீடு, விண்வெளி வீரர், பசுமை குடில், சுகாதாரம், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரி செயல்பாடு, பல்லுயிர் பெருக்கம் உட்பட 240-க்கும் மேற்பட்ட மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக ஆண்டு மற்றும் தேதியைக் குறிப்பிட்டால் அதைக் கணக்கிட்டு கிழமையைக் கூறுதல், பார்வையாளர் மனதில்நினைத்த எண்ணை அறிந்து மிகச்சரியாகக் கூறுதல் போன்ற மாணவிகளின் செயல்முறைகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படச் செய்தன.
ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். சிறந்த மாதிரிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.