

திருச்சி
ஒரு சமூகத்தை நல்வழியில் செழுமைப்படுத்த வேண்டுமெனில், படித்தவற்றை சுயமாக எழுதும் ஆற்றலைப் பெற வேண்டும் என பொறியாளர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "வையத் தலைமை கொள்" இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பொறியாளர் எம்.ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பிடித்தமான பாடம்
அவர் பேசும்போது, மாணவர்கள் மருத்துவம், சட்டம், வணிகம், மேலாண்மை கலை அறிவியல், பொறியியல், சமூகவியல் என அனைத்துப் படிப்புகளையும் தெரிந்துகொண்டு, தங்களுக்கு ஆர்வமுள்ள படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். ஒரு சமூகத்தை நல்வழியில், அறவழியில் செழுமைப்படுத்த வேண்டுமெனில், படித்தவற்றை சுயமாக எழுதும் ஆற்றலைப் பெற வேண்டும். எழுதும் ஆற்றலை தொடர்ச்சியான பயிற்சி மூலம் பெற்றுவிடலாம்.
வாசிப்புப் பயிற்சி
மேலைநாட்டு பள்ளிகளில் கல்வி என்பது மாணவர்களை கவனிக்க வைப்பது, பேச வைப்பது, ஒருவர் பேசுவதை அமைதியாக கேட்க வைப்பது, சிந்தனையில் கவனம் சிதறாமல் இருப்பது ஆகியவை தான் முக்கியமானவையாக உள்ளன, அதன் பிறகு தான் வாசிப்பு
பயிற்சி, எழுதும் பயிற்சி இருக்கிறது. இப்படி படிக்கும் மாணவர்களால் நாட்டுக்கு பல புதுமைகளை கண்டுபிடித்து தர முடியும். வேலைகளில் உயர்வு, தாழ்வு இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ் வொரு மனிதனையும் மதிப்பு, மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற பண்பை வளர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைவர் எ.ராமசாமி, செயலாளர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.செல்வராஜன், துணைத் தலைவர் எம்.குமரவேல், இணைச் செயலாளர் பி.சத்யமூர்த்தி. பள்ளி முதல்வர் க.துளசிதாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.