

கே.சுரேஷ்
புதுக்கோட்டை
ஹரியாணாவில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி பூவிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வட்டாப்பட்டியைச் சேர்ந்த துரைக்கண்ணு - கவிதா தம்பதியரின் மூத்த மகள் பூவிதா. இவர், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஹரியாணா மாநிலம் ரோதக்கில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் பலர் பங்கேற்றிருந்தாலும், முதன் முறையாக பூவிதா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை குறித்து மாணவி பூவிதா கூறியது:
நான் ஒன்றாம் வகுப்பில் இருந்தே அரசுப் பள்ளியில் படித்து வருகிறேன். சிறுவயது முதலே எனக்கு விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். அதன்பின், குத்துச்சண்டை பயிற்சி பெற்றேன். அதிலும், மாவட்ட அளவில், கோட்ட அளவில், மாநில அளவில் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளேன். ஹரியாணாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைபோட்டியில் 3-ம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றேன். முதலிடத்தை ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி வென்றார்.
எதிர்காலத்தில் சர்வதேச அளவில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதை அடைவதற்காக தினமும் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து, பதக்கம் வெல்ல காரணமாக இருந்த எனது பயிற்சியாளர் பார்த்திபன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.