Published : 11 Oct 2019 09:41 AM
Last Updated : 11 Oct 2019 09:41 AM

சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தும் வைக்கோல் பெட்டி அடுப்பு: ஆயக்காரன்புலம் பள்ளி மாணவர்கள் வடிவமைப்பு​

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தில் உள்ள ஆர்விஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அன்பு வினோத், ஆகாஷ். இவர்கள் இருவரும் ஆசிரியர் கார்த்திகேயன் வழிகாட்டுதலுடன், சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தும் வகையில் வைக்கோல் பெட்டி அடுப்பை வடிவமைத்துள்ளனர்.

இந்த அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்தால், 30 நாட்களுக்கு வரும் சமையல் எரிவாயு உருளை 45 நாட்களுக்கு வரும் என்கின்றனர் அந்த மாணவர்கள்.​ இது எப்படி சாத்தியம் என்று கேட்டதற்கு மாணவர்கள் அன்பு வினோத், ஆகாஷ் ஆகியோர் கூறியதாவது:​ ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள ஒரு மரப்பெட்டியை தயார் செய்து கொள்ள வேண்டும். (தேவையான அளவுக்கு ஏற்றபடி அளவை மாற்றிக் கொள்ளலாம்). அதற்குள் சமையல் பாத்திரம் வைக்கும் அளவுக்கு இடைவெளி விட்டு, அதைச்சுற்றி வைக்கோலை துண்டுதுண்டாக நறுக்கி நிரப்பிக் கொள்ள வேண்டும்.​

பின்னர் சாதம் சமைக்க 1:2 என்ற விகிதத்தில் அரிசியும், நீரையும் எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி, சமையல் எரிவாயு அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.​ அதன்பின்னர் பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வைக்கோல் பெட்டியில் வைத்து வெப்பம் வெளிவராத வகையில் பெட்டியின் மேல் மரப்பலகையை வைத்து மூடி விட வேண்டும். 30 நிமிடம் கழித்து பாத்திரத்தின் மூடியை எடுத்துவிட்டு பார்த்தால் சாதம் நன்
றாக வெந்திருக்கும்.

இந்த சாதத்தை நாம் வடிக்க வேண்டியதில்லை. அப்படியே சாப்பிடலாம். சத்தும் கூடுதலாக கிடைக்கும். இதேபோல காய்கறிகளையும் அவிக்கலாம்.​ இந்த பெட்டியில் உள்ள வைக்கோல், பாத்திரத்தின் வெப்பத்தை அப்படியே நிலைக்கச் செய்கிறது. மரப்பலகையானது வெப்பத்தை வெளியே விடாமல் பாதுகாக்கிறது. இப்பெட்டியில் 8 மணிநேரம் வரை வெப்பம் நிலைத்து இருக்கும். இதனால் இந்த பெட்டியில் உணவு பொருட்களை சூடு ஆறாமல் நீண்ட நேரம் பாதுகாக்கலாம்.

​இந்த வைக்கோல் பெட்டியில் சமையல் செய்யும்போது நேரமும், எரிபொருளும் மிச்சமாகிறது. ஆவியில் காய் கறிகளை வேக வைக்கும்போது சத்துக்கள் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.​

- தாயு.செந்தில்குமார்​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x