

சென்னை: ஏழை மாணவர் இலவச கல்வித் திட்டத்தின்கீழ், நடப்பு கல்வியாண்டில் 218 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலை. தெரிவித்திருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டம் 2010-ம்ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இலவசமாக இளநிலை பட்டப் படிப்பு படிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
ஏழை மாணவர்கள், பெற்றோர் இல்லாதவர்கள், விதவைகளின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 250 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டில் 218 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.