‘ஆன்ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை - மாணவர்களுக்கு நெருக்கடி

‘ஆன்ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை - மாணவர்களுக்கு நெருக்கடி
Updated on
2 min read

“லத்தீன் பாடத்துக்கான கேள்வித்தாளை வாங்கியவுடன் ஒன்றுமே புரியவில்லை. விடைத்தாளின் மேல் பகுதியில் எனது பெயரை எழுதினேன்.பின்னர் வினா எண்களை மட்டும் நிரப்பினேன்.

அந்த எண்களைச் சுற்றி பேனாவினால் வட்டமிட்டேன். ஒரு வார்த்தைக்கூட எழுதாமல் அந்த விடைத்தாளை அப்படியே கொடுத்து விட்டேன்” லண்டன் ஹாரோ பள்ளியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு அனுபவம் பற்றி பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய பதிவு இது. யாராக இருந்தாலும் தெரிந்தால்தான் தேர்வு எழுத இயலும்.

இவ்வாறான விடைத்தாளை அளித்த அவருக்கு மற்ற பாடங்களில் இருந்த புலமையின் அடிப்படையில் இடம் கிடைத்தது. அவர் அங்கு படித்ததை விரிவாக எழுதியுள்ளார்.

சாதக, பாதகம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடப்பாண்டு முதல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டை ‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்’ (On Screen marking) முறையில் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. இதன்படி கணினி மூலம் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் திருத்தம் நடைபெறவிருக்கிறது. இதற்கான பயிற்சியும் அவசரகதியில் கொடுக்கப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்களின் மதிப்பெண் கூட்டலில் ‘நிச்சயம்’ தவறு நேராது என்பதால் மறுகூட்டலுக்கான நடைமுறை இந்த ஆண்டே ரத்து செய்யப்படுகிறது. விடைத்தாள்களைத் திருத்த ஆசிரியர்கள் வேறு இடத்துக்குப் பயணம் செய்யத் தேவை இல்லை.

அவரவர் பணிபுரியும் பள்ளியிலிருந்தே விடைத்தாள் திருத்தலாம். தேர்வு முடிவுகளை விரைவாகவே அறிவிக்க இயலும். இவ்வாறு பல சாதக அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்வு மதிப்பீடு இணைய வழியில் மட்டுமே நடத்தப்படுமானால் தேர்வுமுறையும் மேலும் துல்லியமாக நடத்தப்பட வேண்டும் என்கிற வாதம் அடுத்து எழும்.

இதன் விளைவாகப் பள்ளிப் பொதுத் தேர்வையும் கொள்குறி வகை வினாக்களாக (Objective type questions) மாற்று வதற்கு இட்டுச்செல்லும். இதை நோக்கி மாணவர்களைத் தொடக்க நிலை வகுப்பிலிருந்தே தயார்ப்படுத்தும் நிலை உருவாகும்.

ஜனநாயகமும் கல்விப் பரவலும் பெருகிவரும் நிலையில் உயர் கல்விக்கான நிறுவனங்களை அதிகரித்து பலருக்கும் வாய்ப்புகளை அளிப்பது மட்டுமே பயன ளிக்கும். மாறாகத் தேர்வுகள் வடிகட்டுவதற்கான முயற்சி களாக மாறுவது ஆரோக்கியமான போக்கல்ல.

கற்றல் சுதந்திரமாக நடைபெறுவது எவ்வளவு முக்கியமோ அது போலவே மாணவர்கள் தமக்குத் தெரிந்ததை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேர்வும், மதிப்பீட்டு முறையையும் வழங்க வேண்டும்.

திருத்தும் அரும்பணி: பல்வேறு நெருக்கடிகளுடன் தேர்வினை மாணவர்கள் எதிர்கொண்டால் அவர்களுடைய படைப்பாற்றலும் கற்பனைத் திறனும் வளராது. பதிலாகப் போட்டி தேர்வுக்குத் தயாராகும் பந்தயக் குதிரைகளாகவே மாணவர்கள் மாறிவிடுவார்கள். டிஜிட்டல் முறை மாணவர்களின் சேர்க்கை, விலகுதல் தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பதற்கு உதவிக்கரமாக இருக்கலாம்.

தேவை யானால் மாணவர்கள் எடுக்கக்கூடிய மதிப்பெண்களைப் பதிவுசெய்ய உதவலாம். ஆனால், கற்றல் கற்பித்தலில் இருந்து மதிப்பீடுவரை அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கும் நிலை படைப்பாற்றலுக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்தாகவே முடியும்.

ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு ஆத்மார்த்த மாக இருக்கத்தான் விடைத்தாள்களை மதிப்பீடு செய் வதை, திருத்துவது என்பார்கள். ஏனெனில் மாணவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனை மீண்டும் செய்யாமல் இருக்க உதவுவதே இதன் முதன்மையான நோக்கம். எங்கோ, யாரோ, எங்கோ, யாரையோ திருத்தும் ‘ஆன்ஸ்க்ரீன் மார்க்கிங்’ மதிப்பீட்டு முறை வருமேயானால் கல்வியின் நோக்கம் நிறைவேறாது.

- கட்டுரையாளர்: பள்ளித் தலைமை ஆசிரியர், எழுத்தாளர்; thulirmadhavan@gmail.com

‘ஆன்ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை - மாணவர்களுக்கு நெருக்கடி
கருந்துளை: கால-வெளியின் முடிவு | அணு முதல் அண்டவெளி வரை 07

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in