சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு துணிப்பை, விதை பென்சில்கள்
மதுரை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் மணியாஞ்சி ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு துணிப்பைகள், விதைப் பென்சில்கள் வழங்கப்பட்டன.
மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பு சார்பில் மாதம்தோறும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பை தவிர்ப்போம், துணிப்பை பயன்படுத்துவோம்" என்ற நோக்குடன் நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய விதைப்பென்சில், துணிப் பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த மாதம் அலங்காநல்லூர் ஒன்றியம் மணியாஞ்சியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவற்றை வழங்க மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பு முடிவு செய்தது.
அதன்படி, அந்த அமைப்பின் நிர்வாகி அழகுராஜா துணிப் பைகள், விதைப் பென்சில்களை மணியாஞ்சி ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கிளாரா, ஆசிரியர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
