Published : 20 Feb 2023 06:32 AM
Last Updated : 20 Feb 2023 06:32 AM
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக தயாராகும் ‘அகத்தியர்’ எனும் சிறார் செயற்கைக்கோள் இஸ்ரோவின் ராக்கெட் மூலம் அக்டோபரில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெரு விழாவை முன்னிட்டு, இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்கள் இஸ்ரோ ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் 86 மாணவர்கள்
இந்த திட்டத்துக்காக தமிழ்நாட்டுமாணவர்கள் மூலம் 5 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் தயாராக உள்ளது. பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை தலைமையின்கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களை சேர்ந்த 58 அரசுப் பள்ளிகளில் இருந்து 46 மாணவிகள் உட்பட மொத்தம் 86 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்கு 20 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 2 கிலோ எடையில் தயாரிக்கப்பட உள்ள சிறார் செயற்கைக்கோளுக்கு ‘அகத்தியர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு மாணவர்கள் 5 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று வந்தனர். தொடர்ந்து 86 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் அடங்கிய குழுவுக்கு சென்னையில் பிப்ரவரி 16 முதல் 19-ம் தேதிவரை 4 நாட்கள் சென்னை ஐஐடி உட்படஉயர்கல்வி மற்றும் தொழிற் நிறுவனங்கள் மூலம் பயிற்சி தரப்பட்டது.
சூழலியல் காக்கும் ‘அகத்தியர்’
அகத்தியர் செயற்கைக்கோள் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக செலுத்தப்பட உள்ளது. இதன் ஆயுட்காலம் 6 மாதங்களாகும். வனப்பகுதிகள் கண்காணிப்பு, மலைகள், காடுகளின் வளங்களை ஆராய்தல் உட்பட செயல்பாடுகளுக்கு இது உதவும். இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளரான இஸ்ரோ விஞ்ஞானி டி.கோகுல் கூறியதாவது: பிரதமர் மோடி இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பும் இதில் இடம் பெற வேண்டும் என்பதில் மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை உறுதியாக இருந்தார். அவரின் அறிவுறுத்தலின்படியே மலைவாழ், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என அனைத்து தரப்பில் இருந்து திறன்மிக்க மாணவர்கள் 86 பேர் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் 28 மாணவர்கள் ஜவ்வாதுமலை, நீலகிரி உட்பட மலைவாழ் பகுதிகள் மற்றும் பழங்குடியின, நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களின் ஆர்வமும், செயல்பாடுகளும் கல்லூரி மாணவர்களுக்கு நிகராக இருக்கிறது. செயற்கைக்கோள் தயாரிப்பில் ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டோம். இத்தகைய முயற்சிகள் அறிவியலை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வழிசெய்யும். மேலும், பள்ளிமாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன், அவர்களின் எதிர்கால திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அகத்தியர் செயற்கைக்கோள் இஸ்ரோவின் எஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT