Published : 17 Feb 2023 02:45 PM
Last Updated : 17 Feb 2023 02:45 PM

கோவில்பட்டி அருகே மின்வசதி இன்றி இயங்கும் அங்கன்வாடி மையங்கள்: சிரமப்படும் குழந்தைகள்

அங்கன்வாடி மையத்தில் கேரம் விளையாட்டு கற்றுக்கொள்ளும் குழந்தைகள்.

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாகி யுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிஅருகே அமைந்துள்ள இனாம் மணியாச்சி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் இலக்குமி ஆலை மேலக்காலனி, அத்தைகொண்டான், கிருஷ்ணாநகர், இனாம் மணியாச்சி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இனாம் மணியாச்சி பெரிய ஊராட்சியாக உள்ளதால் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 40 குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்த அங்கன்வாடி மைய கட்டிடங்கள் இனாம் மணியாச்சி ஊராட்சி மன்ற பழைய அலுவலகம் அருகே இருப்தால் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அங்கன்வாடி மையங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. இதையடுத்து பழைய அலுவலகம் பயன்பாடின்றி உள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பழைய கட்டிடத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கன்வாடி கட்டிடங்களுக்கும் மின் இணைப்பும் இல்லாமல் போய்விட்டது. மின் இணைப்பு இல்லாததால் அங்கன்வாடி மையங்களில் காற்றாடி இயக்க முடியாததால், குழந்தைகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் எம்.தெய்வேந்திரன் கூறியதாவது:

டிசம்பர் மாதம் குளிர் காலம் என்பதால், பெரியளவில் பிரச்சினை இல்லை. ஆனால், கடந்த 2 வாரத்துக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருப்பதால், அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள் காற்றாடி இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையீட்டும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின்வசதி இல்லாததால் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து வர தயங்குகிறார்கள். குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் அதிக அக்கறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு கிடைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது முரண்பாடாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x