Published : 17 Feb 2023 08:09 AM
Last Updated : 17 Feb 2023 08:09 AM

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்: 100-வது போட்டியில் களமிறங்குகிறார் சேதேஷ்வர் புஜாரா

டெல்லி அருண் ஜெட்லி மைதான ஆடுகளத்தைப் பார்வையிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா

புதுடெல்லி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாராவுக்கு இது 100-வது போட்டியாகும்.

இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல்ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

நாக்பூர் போட்டியில் மட்டை வீச்சில் கேப்டன் ரோஹித் சர்மா தாக்குதல் ஆட்டத்தையும், பாரம்பரியமான தற்காப்பு ஆட்டத்தையும் சரியான கலவையில் பயன்படுத்தி சதம் விளாசினார். கீழ்வரிசையில் ரவீந்திர ஜடேஜா (70), அக்சர் படேல் (84) ஆகியோர் பேட்டிங்கில் பெரிதும் உதவினர். இதன் காரணமாகவே இந்திய அணியால் 400 ரன்களை எட்ட முடிந்தது.

இவர்களிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும் டாப் ஆர்டர் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறினர். இதில் கே.எல்.ராகுல் தனது இடத்தை அணியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.

ஏனெனில் சிறந்த பார்மில் உள்ளஷுப்மன் கில்லை வெளியே அமரவைத்துவிட்டுதான் கே.எல்.ராகுலுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுலின் சராசரி 34.07 ஆக உள்ளது. சர்வதேச அளவில் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்களில் இந்த செயல் திறன் சராசரிக்கும் குறைவானதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ரன் குவிக்கும் இயந்திரமான விராட் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்பக்கூடும் என கருதப்படுகிறது.

புஜாராவுக்கு இன்றைய போட்டி சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100-வது ஆட்டமாகும். இதன் மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். 35 வயதான புஜரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 34 அரை சதங்கள் என 44.15 சராசரியுடன் 7,021 ரன்கள் குவித்துள்ளார். 100-வது போட்டி என்பதால் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் ஜெட்லி ஆடுகளம் நாக்பூர் ஆடுகளத்தைவிட மெதுவாக இருக்கக்கூடும். இதனால் மீண்டும் ஒரு முறை ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு கடும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.

இருப்பினும் அவர், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 30 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் போட்டிக்கான உடற்தகுதி விஷயத்தை இந்திய அணி நிர்வாகம் கவனத்தில் கொண்டால் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம்தான். அவர், களமிறங்காத பட்சத்தில் சூர்யகுமார் யாதவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியானது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பல்வேறு சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட போதிலும் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அது கைகொடுக்காமல் போனது. முதல் போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக செயல்பட தவறினர். மேலும் பெரிய அளவில் போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தவில்லை.

டாப் ஆர்டரில் டேவிட் வார்னரின் மோசமான பார்ம் அணியை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆட்டத்திலும் வார்னர் சிறப்பாக செயல்பட தவறினால் எஞ்சிய இரு போட்டியிலும் அவர், அணியில் இடம் பெறுவது கடினமே. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக டிராவிஸ் ஹெட் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். முதல் ஆட்டத்தில் அறிமுக வீரராக டாட் மர்பி 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். அதேவேளையில் முன்னணி வீரரான நேதன் லயன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர், தனது ஆட்ட யுத்திகளை மாற்றி அமைக்கக்கூடும். மிட்செல் ஸ்டார்க் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஸ்காட் போலண்ட் நீக்கப்படுவார்.

நேரம்: காலை 9.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x