Published : 17 Feb 2023 01:14 PM
Last Updated : 17 Feb 2023 01:14 PM

பொதுமக்களுக்கு வீடு, குடிநீர், பள்ளி, சுகாதாரத்தை தரமாக தர வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

இருக்க வீடு, நடக்க சாலை, குடிக்க தண்ணீர், இரவில் தெருவிளக்கு, படிக்கப் பள்ளி, கிராம சுகாதாரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தரமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, அரசு தீர்த்திடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை, நாம் வெறும் காகிதங்களாக பார்க்காமல் ஒருவரின் வாழ்வாக, எதிர்காலமாக கருதி பார்க்கவேண்டும். எனவே தான் இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி “முதல்வரின் முகவரி” என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்த அரசு, அவர்களின் குறைகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பட்டா மாறுதல் தாமதமின்றி, எவ்வித அலைக்கழிப்பும் இன்றி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் உறுதி செய்ய வேண்டும்.

சார்நிலை அலுவலர்களை ஆய்வு செய்யுங்கள். தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். குறிப்பாக கிராமப்புர மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித் தாருங்கள்.

இருக்க வீடு, நடக்க சாலை, குடிக்க தண்ணீர், இரவில் தெருவிளக்கு, படிக்கப் பள்ளி, கிராம சுகாதாரம் - இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காணுங்கள்.

இந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது, விவசாயிகள், சிறுதானியஉற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புகூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்தனர். அவற்றை அரசு வேளாண்மைத் துறைச் செயலாளரும், மாவட்ட அளவில் ஆட்சியரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவ்வரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.

இந்த நான்கு மாவட்டங்களைப் பொருத்தவரை சேலம், ஒசூர் ஆகிய வேகமாக வளரக்கூடிய இரண்டு மாநகராட்சிகள் உள்ளிட்ட பல நகராட்சிப் பகுதிகள் உள்ளன.

இங்கெல்லாம் வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருவதால் மக்கள் தொகை உயர்வும் காணப்படுகிறது. இது நகராட்சிகள் வழங்கும் சேவைகளின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்துகிறது. எனவே,அடிப்படை பணிகளில் குறிப்பாக குப்பைகளை விரைந்து அகற்றுதல், கழிவு நீர் தேங்காமல் தூர் வாருதல்,பழுதான சாலைகளை சீர் செய்தல்ஆகியவற்றிலும் கவனம் செலுத்துங்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள், விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் உங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகள் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள், பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திட வேண்டும். அதோடுநில்லாமல், குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதேஊடகத்திற்கு நீங்கள் அளிக்கவேண்டும். இது மிக மிக முக்கியமாக நீங்கள் உங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்துகொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு தேவைக்கு ஒருவர் வரும் போது, அங்கு அவர் எதற்காக வந்துள்ளார்? அதை யார் செய்வார்? அதற்கான மனு விபரங்களின் தேவை என்ன? ஆகியவை குறித்து பதில் கூற தற்போது யாரும் இல்லை என நினைக்கிறேன். இதனை சரி செய்ய வேண்டும். காவல்துறையில், வரவேற்பாளர் என்ற அமைப்பு காவல் நிலையத்தில் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை, பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பிற துறைகளும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x