Published : 14 Feb 2023 06:18 AM
Last Updated : 14 Feb 2023 06:18 AM

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும்: திரவுபதி முர்மு வலியுறுத்தல்

லக்னோ: பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்று லக்னோவில் நடைபெற்ற அம்பேத்கர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ நகரில் அமைந்துள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய சூழலில் இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து கல்விநிறுவனங்களும், குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்த சூழல் அமைப்பை முழுமையாக பயன்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தங்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் புதிய முயற்சிகள் இந்தியாவை புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பாக இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தின் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023 மூலம் முதலீடு மற்றும் வணிகத்திற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாதகமான சூழலுடன் கல்வியை இணைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மக்கள் நலனுக்காக புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும், நான்காவது தொழில் புரட்சியின் மையமாகவும், ‘ஸ்டார்ட் அப்'களுக்கான தொழில் பாதுகாப்பு மையமாகவும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களும் புதிய புரட்சி, சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தின் தூதுவர்களாக மாறினால் அது மகிழ்ச்சிகரமான சூழலாக உருவெடுக்கும்.

அம்பேத்கர், ஏழை மக்களுக்குக்கல்வி அளிப்பது பல்கலைக்கழகத்தின் அடிப்படைக் கடமை என்று கருதினார். ஒரு கல்வி நிறுவனம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும். அந்த வகையில், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் 50 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகம் அம்பேத்கரின் கொள்கைகளின்படி நாட்டிலும் மாநிலத்திலும் கல்வியை தொடர்ந்து பரப்பும் என்று உறுதியாக நம்புகிறேன். பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான தருணம். இந்நாளில், அவர்கள் பல வருட கடின உழைப்பின் பலனைப் பெறுகிறார்கள்.

மாணவர்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்களோ, அதற்காக அவர்கள் இன்றிலிருந்தே உழைக்கவேண்டும். அவர்களின் இலக்கை ஒருபோதும் மனதில் இருந்து அகற்றிவிடக்கூடாது. சில மாணவர்கள் நல்ல ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆக வேண்டும் என்பது எனது அன்பான விருப்பம்.

கல்வியும், கற்பித்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சிறந்த கல்வி முறைக்கு சிறந்த ஆசிரியர்கள் தேவை. நமது நம்பிக்கைக்குரிய மாணவர்கள், கற்பித்தலை பணியாக ஏற்று, நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதில் தங்களின் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பட்டம் பெறும் மாணவர்கள் கல்வி மற்றும் அறிவின் பலத்தால் வாழ்க்கையில் நிறைய சாதனை படைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதேநேரத்தில் அவர்கள்நமது மதிப்பீடுகள் மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அவர்கள் அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

எப்போதும் சிறப்பாக செயல்படுங்கள். ஒரு நெருக்கடியான சூழ்நிலை வரும்போதெல்லாம், ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதைப் பற்றி சிந்தித்து, அதை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள். இது உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x