Published : 30 Jan 2023 06:07 AM
Last Updated : 30 Jan 2023 06:07 AM

‘டெண்டுல்கர் நீண்ட காலம் காத்திருந்தார்’ - ரோஹித், விராட் கோலியிடம் பொறுமையாக இருக்க வேண்டும்: ரவிச்சந்திரன் அஸ்வின்

புதுடெல்லி: தலை சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கரே உலகக் கோப்பையை தனது 6-வது முயற்சியில்தான் வெல்ல முடிந்தது. இதனால் ஐசிசி கோப்பையை வெல்லும் விஷயத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. அதன் பின்னர் ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபியை 2013-ல் கைப்பற்றியது. இதன் பின்னர் இந்திய அணி ஐசிசி நடத்திய எந்த ஒரு தொடரையும் வெல்லவில்லை. இதனால் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே காரணமாகவும் அமைந்தது.

தற்போது ரோஹித் சர்மாவுக்கும் அந்த நெருக்கடி உருவாகி உள்ளது.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஆதரவாக சீனியர் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது:

நீங்கள் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று சொல்வது எளிது. இந்திய அணியின் தலைசிறந்த வீரரான சச்சின் 1992, 1996, 1999, 2003, 2007 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடினார். இறுதியாக அவரால் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் வெற்றி பெற முடிந்தது. ஒரு முறை உலகக் கோப்பையை வெல்வதற்காக அவர், 5 முறை காத்திருக்க வேண்டியது இருந்தது.

எம்எஸ் தோனி பொறுப்பேற்ற உடனேயே உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இது அனைவருக்கும் நடைபெறும் என்று கூற முடியாது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2007 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை காயம் காரணமாக ரோஹித் சர்மா தவறவிட்டார். விராட் கோலி மட்டுமே 2011, 2015, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைகளில் விளையாடினார்.

அவர், தற்போது 4-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளார். விராட் கோலி, ஐசிசி தொடரை வென்று கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். அவர், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி உள்ளார். ரோஹித் சர்மாவும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் இருந்துள்ளார்.

இதனால் இந்த வீரர்களுக்கான இடத்தை நாம் கொடுக்க வேண்டும். இவர்கள் இருதரப்பு தொடர்கள், ஐபிஎல் உட்பட மற்ற ஆட்டங்களிலும் விளையாடுகிறார்கள். ஐசிசி தொடர் என்று வரும் போது அனைத்தும் நம் வழியில் நடப்பதற்கு முக்கியமான தருணங்கள் தேவை. இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். - பிடிஐ

வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x