பெண்ணை மதிப்பதே ஆண்மை

பெண்ணை மதிப்பதே ஆண்மை
Updated on
1 min read

பெண்களை மதிக்கும் விதமாக ஒழுக்க வகுப்புகளை பள்ளி அளவில் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து மாநில கல்வித்துறை, சிபிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்கள் தங்களுடைய பதிலை தாக்கல் செய்யும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகள், சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வர அடிப்படை காரணம் பெண்கள் குறித்த ஆண்களின் கண்ணோட்டத்தில் உள்ள சிக்கல்களே என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களை சீண்டுவது, அவர்கள் பின்னால் சுற்றுவது போன்றவை வீரத்தை, பலத்தை காட்டுவதாக நினைப்பது மிகத் தவறு. பெண்களை சீண்டாமல், மதித்து நடப்பதே உண்மையான ஆண்மை. எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது, அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதுதான் நல்ல வளர்ப்பின் அடையாளம். இதனை பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் உணர வேண்டும்.

தொடக்கப்பள்ளி நிலையில் இருந்தே மற்ற பாலினத்தவரை மதித்து நடக்க கற்று தர வேண்டும். இதன்பொருட்டு ஒழுக்க வகுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அனைத்து விதமான வாரியத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கேரளத்தில் நடைபெற்றிருந்தாலும் தமிழகத்திலும் பாலின சமத்துவ கருத்துகளை பால்ய பருத்திலிருந்தே சிறார்களுக்கு ஊட்டும் நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in