Published : 12 Jan 2023 06:02 AM
Last Updated : 12 Jan 2023 06:02 AM

588 மாணவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு வழங்குகிறார்: 20 பேருக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சென்னையில் இன்று (ஜன.12) நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்குகிறார்.

“ மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலஅளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்” என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், சாத்தியமானவற்றை ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்குமான இடம் ஆகும். கலைச்செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது.

மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனால்தான் 6 முதல் 12-ம் வகுப்புமாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதற்காக ஊக்குவிக்கப்பட்டனர்.

20 லட்சம் பேர் பங்கேற்பு: அதன்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் கடந்தாண்டு நவ.23-ம்தேதி தொடங்கி டிச.10 வரை நடத்தப்பட்டன.

கலைத் திருவிழா 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம்வகுப்பு வரை, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. மொத்தம் 196 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் சுமார் 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

அரசு பள்ளிகள் அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகளில்

வென்ற மாணவர்களுக்கு சென்னை பெரியமேட்டில் உள்ளஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று (ஜன.12) மாலை பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது.

கலையரசன், கலையரசி விருது: இதில், கலைத் திருவிழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 588 மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்குகிறார். மேலும், அரசு சார்பில் "கலையரசன்”, "கலையரசி" விருதும் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்குவிக்கப்பட உள்ளது.

இன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்காக மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாட்டின் பேரில் பொறுப்பு ஆசிரியர்கள் ரயில், பேருந்துகளில் அழைத்து வந்துள்ளனர்.

பரிசளிப்பு விழாவிற்கு அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x