Published : 10 Jan 2023 06:06 AM
Last Updated : 10 Jan 2023 06:06 AM

கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம்: தேன்கனிக்கோட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே ஆலள்ளி வனப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி கர்நாடகா வனப்பகுதிக்குள் யானைகள் விரட்டப்பட்டன.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானைகள் பகலில் வனத்திலும், இரவில் அங்கிருந்து வெளியேறி, வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர். யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த 30 காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முள் பிளாட் என்கிற இடத்தில் தஞ்சமடைந்தன. பின்னர் அங்கிருந்து ஆலள்ளி வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டன.

இந்நிலையில் அண்மையில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர்கள் காளியப்பன், வேணுலு மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளை ஆலள்ளி பகுதியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு காட்டு யானைகள் மரக்கட்டா வனப்பகுதியில் தேன்கனிக் கோட்டைஅஞ்செட்டி சாலை வழியாக கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. இதையடுத்து விவசாயிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x