Published : 22 Dec 2022 06:04 AM
Last Updated : 22 Dec 2022 06:04 AM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு | தனித்தேர்வர்கள் டிச.26 முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் எஸ்.சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கெனவே தனித்தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்று்ம தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியான தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரைகாலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

சிறப்பு அனுமதி முறை: மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி முறையில் (தட்கல்) ஜனவரி 5 முதல் 7-ம் தேதி வரை உரிய தேர்வுக்கட்டணத்துடன் மேல்நிலை படிப்பு எனில் கூடுதலாக ரூ.1000-ம் எஸ்எஸ்எல்சி எனில் ரூ.500-ம் சிறப்பு கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை இ-சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்வது குறித்த தகவல்களை www.dge1.tn.gov.in என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலு்ம அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்கள் பெறலாம்.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ படித்த மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளுக்கும் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தேர்வுகளுக்கும் மேலே குறிப்பிடப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x