Published : 16 Dec 2022 06:04 AM
Last Updated : 16 Dec 2022 06:04 AM

அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்? - காலஅட்டவணை வெளியீடு

சென்னை: அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்படும் என்ற கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளையும், கணக்கியல் தேர்வுகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு இரண்டு தடவை (பிப்ரவரி மற்றும்ஆகஸ்டு) மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தொழில்நுட்பத்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய காலஅட்டவணையை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 11, 12-ல் சுருக்கெழுத்து ஹை ஸ்பீடு தேர்வும், பிப்ரவரி 18, 19-ல் சுருக்கெழுத்து ஜுனியர், இண்டர்மீடியட், சீனியர் தேர்வுகளும் பிப்ரவரி 20-ல் கணக்கியல் தேர்வும் (ஜுனியர் மற்றும் சீனியர்) பிப்ரவரி 25, 26-ல்தட்டச்சு (ஜுனியர், சீனியர், அதிவேகம்) தேர்வும் நடத்தப்பட உள்ளன.

தேர்வுகளுக்கான அறிவிப்புகள் டிசம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்டு 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 20-ம் தேதி ஆகும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 21-ம் தேதி அன்று வெளியாகும்.

இதேபோல், ஆகஸ்டு பருவதேர்வு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகால அட்டவணையை www.dte.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜி.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.

கணினி சான்றிதழ் தேர்வு: தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளைப் போன்று அரசு கணினி சான்றிதழ் தேர்வும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2023-ம் ஆண்டு காலஅட்டவணையில் கணினிசான்றிதழ் தேர்வு குறித்த எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x