மதுரை | மாநில சதுரங்க போட்டியில் - மதுரை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

மதுரை | மாநில சதுரங்க போட்டியில் - மதுரை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி
Updated on
1 min read

மதுரை: மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மதுரை அரசு பள்ளி மாணவிகள் இருவர் வெற்றி பெற்றனர். கரூரில் ஆனந்த் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல் 20 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் 10 வயதுக்குஉட்பட்டோருக்கான பெண்கள்பிரிவில் மேலூர் அ.செட்டியார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவிகள் ஜெ.விசாகலட்சுமி (5-ம் இடம்) ஆர்.ஹன்சிகா (13-ம் இடம்) ஆகியோர் வெற்றி பெற்று பரிசு பெற்றனர்.

இவர்களை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, சதுரங்கப் பயிற்சியாளரும், இடைநிலை ஆசிரியருமான ஞா.செந்தில்குமார் மற்றும் கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

இது குறித்து ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், மேலூர் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் படிப்பை முடித்து உயர் கல்விக்காக வேறு அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும் சதுரங்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி அளிப்பதுடன் அவர்கள் பல்வேறு போட்டிகளுக்கு பள்ளிகள் சார்பில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் பல்வேறு தொடர் சாதனைகளை குவித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளில் மாவட்டம், மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளனர் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in