

சென்னை: பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சிபீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 2 பேர் பங்கேற்கின்றனர்.
திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவர் ஆர்.பிரியதர்ஷன், 5-ம்வகுப்பு மாணவர் ஆர். தேவதர்ஷன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி வடுகபட்டி ஹாக்கர்ஸ் கிளப்பில் தலைமைப் பயிற்சியாளர் பசூல் கரிமிடம் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றனர்.
மாணவர்களுக்கு பாராட்டு: இவர்கள் இந்தாண்டு நடைபெற்ற 32-வது ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி அணிக்காக 11 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். இதையடுத்து பெங்களூருவில் டிசம்பர் 11 முதல் 22-ம் தேதி வரைநடைபெறும் 60-ம் ஆண்டு தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவர்கள் இருவரும் தேர்வாகியுள்ளனர்.
அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.