

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்த சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இதில் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் படிக்கும் 5,941 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமைகளில் ரவை உப்புமா அல்லது சேமியா உப்புமா, அரிசி, கோதுமை ரவை உப்புமா - காய்கறி சாம்பார். செவ்வாய்கிழமைகளில் ரவை காய்கறி கிச்சடி, சேமியா, சோள காய்கறி கிச்சடி. புதன்கிழமைகளில் ரவை பொங்கல் அல்லது வெண் பொங்கல்- காய்கறி சாம்பார். வியாழக்கிழமைகளில் சேமியா உப்புமா, ரவை உப்புமா, காய்கறி சாம்பார். வெள்ளிக்கிழமைகளில் ரவை காய்கறி கிச்சடி அல்லது சேமியா, கோதுமை ரவை கிச்சடி, ரவை கேசரி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு இத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த திட்டத்தை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.