Published : 02 Dec 2022 06:04 AM
Last Updated : 02 Dec 2022 06:04 AM
சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் அடுத்த மாதம் 16, 17, 18 தேதிகளில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி நூலக செயல்பாடுகளில் புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க சிறந்த கருவியாக பள்ளி நூலகங்கள் திகழ்வதால், மாணவர்கள் தரமான புத்தகங்களை தேடி வாசிப்பதன் மூலம் வாசகராக, சிந்தனையாளராக, எழுத்தாளராக உருவாகும் வகையில் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் பள்ளிக் கல்வித்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதுபோல பொதுமக்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தெற்கு ஆசியாவிலேயே 2-வது பெரிய நூலகமான சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. மேலும், கிளை நூலகம், மாவட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்து நூலகங்களையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சி இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அந்தந்தமாவட்ட நிர்வாகமும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன.
இந்நிலையில், சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தி வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) பள்ளிக் கல்வித்துறை இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.
இதையொட்டி பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனி சென்று அங்கு நடந்த பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி சென்னையில் 2023 ஜனவரி மாதம் முதன்முறையாக நடத்தப்பட உள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் வெளியிட்டார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக அரசு கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் அடுத்த மாதம் 16, 17, 18-ம் தேதிகளில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் 2 வாரம் புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்தாண்டு அதில் 3 நாட்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், 40 நாடுகளை பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 12 நாடுகள் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளன. சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அந்தந்த நாட்டின் பெருமைகள் மற்றும் சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்
சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறையும், பபாசியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாசிப்புபழக்கம் குறைந்து வரும் தற்போதைய சூழலில் அதனை ஒரு இயக்கமாகவே உருவாக்க வேண்டும் என்றநோக்கில் தமிழக அரசு செயல்படுவதை கல்வியாளர்கள் பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT