Published : 29 Nov 2022 06:12 AM
Last Updated : 29 Nov 2022 06:12 AM

ஐ.நா. தலைமையகத்தில் டிசம்பர் 14-ல் காந்தி சிலை திறக்கப்படுகிறது

நியூயார்க்: ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாகடிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலைதிறக்கப்பட உள்ளது. ஐ.நா.வுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ள இந்தச் சிலை திறப்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கின்றன. இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதையொட்டி, அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செல்ல உள்ளாா். அப்போது அங்கு டிச.14-ம் தேதி மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை திறக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் கூறுகையில், ‘‘இந்தியாவின் பரிசான மகாத்மா காந்திசிலை, முதல்முறையாக ஐ.நா. தலைமையகத்தில் மிகவும் மதிப்புமிக்க இடமாகவும், பரந்தும் காணப்படும் வடக்குப் புல்வெளிப் பகுதியில் டிச.14-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த சிலை திறப்புநிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா கொரோசி ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தாா்.

ஐ.நா. தலைமையகத்தில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்ம’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்துள்ளாா். ஏற்கெனவே, கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூாிய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலை ஐ.நா.வுக்கு இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட உள்ள ஐ.நா.தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x