Published : 29 Nov 2022 06:02 AM
Last Updated : 29 Nov 2022 06:02 AM

கேள்வியில் இருந்துதான் தொடங்குகிறது அறிவியல்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

புதுச்சேரி: அறிவியலும் தொழில்நுட்பமும் கேள்வியில் இருந்துதான் தொடங்குகிறது என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.

கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கண்காட்சியை திறந்து வைத்தார். விண்வெளி, நீர் சேமிப்பு, சோலார் சிஸ்டம், பேட்டரி வாகனம், தாவர வளர்ப்பு என பல படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினர். அப்போது, மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். கேள்வி கேட்பதே அறிவியலை அறிய முதல்படி என்று விளக்கம் தந்தார். அதைத்தொடர்ந்து, மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அறிவியல் தொழில்நுட்பம் என்பது கேள்வியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த வகையில், மாணவர்கள் சமுதாயம் சார்ந்த கேள்விகளும், படிப்பு சார்ந்த கேள்விகளும் கேட்கத் தொடங்குவது அவசியம்.

மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எந்த பள்ளியில் படித்தாலும் நம்மால் சாதிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகள் கொடுப்பதற்கு சமுதாயமும், அரசும் உதவுகிறது.

இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தால்தான் உலகத்திற்கு தேவையான பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட உள்ளன. கரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக கல்வி சிறிது தடைபட்டிருந்தாலும் கூட, இன்னும் புதிய வேகத்துடன் அறிவியல், தொழில்நுட்பம் மூலம் கல்வித்துறை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்.

அறிவியல் ஆர்வம் உள்ள அரசுபள்ளி மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். அதில் நானும் என்னை இணைத்து கொள்வேன். 40 ஆண்டுகள் எனக்கான வசதிகளை செய்து கொடுத்தது இந்தியாதான். திரும்ப இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என்றால் காசு பணத்தைவிட, என்னுடைய நேரத்தை அதிகம் ஒதுக்க வேண்டும் அதை செய்வேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x