Published : 24 Nov 2022 06:13 AM
Last Updated : 24 Nov 2022 06:13 AM

2.30 லட்சம் மைல் தொலைவில் இருந்து பூமியை படம் பிடித்தது ‘ஓரியன்’ விண்கலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. 2.30 லட்சம் மைல் தொலைவில் இருந்து பூமியை படம் பிடித்து அனுப்பி உள்ளது.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது.

ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16-ஆம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.

பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்துஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை நெருங்கி உள்ளது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது. சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 2-ஆம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும். அதன்பின் ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி பூமிக்கு திரும்பும்.

விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்தப் புகைப்படங்கள் துல்லியமாக இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x