Published : 24 Nov 2022 06:03 AM
Last Updated : 24 Nov 2022 06:03 AM

கொளத்தூர் | அதிநவீன வசதிகளுடன் மாநகராட்சி பள்ளி; ரூ.4.37 கோடியில் சீரமைப்பு: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர், பந்தர் கார்டன்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ரூ.4.37 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் நவீனவசதிகளுடன் பள்ளியை மேம்படுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார்.

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீட்டி தோட்டம் மற்றும் வீனஸ் நகரில் ரூ.9.02 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ரூ.38.98 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடியில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவ,மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், வீனஸ் நகரில் ரூ.7.75 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர், பந்தர் கார்டன்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ரூ.4.37 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் நவீனவசதிகளுடன் பள்ளியை மேம்படுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.99 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணி, ஜவஹர் நகர் முதலாவது வட்ட சாலையில் அமைந்துள்ள இறகு பந்து மைதானத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள மீர்ஷாஜித் உசேன் பூங்கா, ஜெய்பீம் நகர் முதல் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜெய்பீம் நகர் 12-வது தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம், கென்னடி சதுக்கம் முதல் தெருவில் அமைந்துள்ள கென்னடி சதுக்க பூங்கா, ஜவஹர் நகர் 2-வது வட்ட சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணி, சீனிவாச நகர் 3வது தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஆர்.கே. சிண்டிகேட் நகரில் உள்ள பூங்கா உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சீனிவாசா நகர் 3-வது தெரு மற்றும் திருவீதி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள சென்னை ஆரம்ப பள்ளிகளில் பெண்களுக்கான கழிவறை கட்டும் பணி, திருவீதி அம்மன் கோயிலில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளி, சோமையா தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஜி.கே. எம் காலனி பிரதான சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள், சோமையா தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நவீன சமையற்கூடம் கட்டும் பணி, ஜி.கே.எம். காலனி 14வது தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், லோகோ ஸ்கீம் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.38.98 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x