

துரின்: ஏடிபி பைனல்ஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக முறை பட்டம் வென்றிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின்காஸ்பர் ரூட் மோதினர்.
ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். 35 வயதான நோவக் ஜோகோவிச், 7 ஆண்டுக்கு பின் ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2008, 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தார்.
6-வது முறையாக பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் அதிக முறைஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம்வென்றவர்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பட்டம் வென்ற ஜோகோவிச் சுமார் ரூ. 39 கோடி பரிசு தொகையுடன் 1500 தரவரிசை புள்ளிகளையும் பெற்றார்.