

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. சென்னை மாநகரில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்து பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை பெருநகரில் நேற்று 171 பள்ளிகள், 12 கல்லூரிகள், 24 பொது இடங்கள் என 207 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பும் அதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் 15,468 பள்ளி மாணவ மாணவிகள், 820 கல்லூரி மாணவ, மாணவிகள், 620 பொதுமக்கள் என 16,908 பேர் பங்கேற்றனர். போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.