Published : 17 Nov 2022 06:23 AM
Last Updated : 17 Nov 2022 06:23 AM
கேப் கனாவெரல்: நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா 1969ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் - 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்புகிறது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, 'ஓரியன்' விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் இந்திய நேரப்படி கடந்த ஆக.28-ம் தேதி, மாலை 6:00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில், இயந்திரத்தில் எரிபொருள் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி, மற்றும் 23-ஆம் தேதிகளில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு, தொழில் நுட்ப கோளாறு காரணமாக முயற்சியை நாசா ஒத்தி வைத்தது. நிலவுக்கு மனிதனை அனுப்பும், , 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராக்கெட்டை செலுத்த தயாரான நிலையில், திடீரென ஹைட்ரஜன் வாயு கசிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து 322 அடி நீளமுள்ள ராக்கெட்டுக்குள் மீண்டும் எரிபொருளை செலுத்தி, வாயுவை வெளியேற விடாமல் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நிலவை ஆய்வுசெய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நேற்று மதியம்12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட எட்டுநிமிடங்களுக்கு பின்னர், மையபகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஓரியன் விண்கலம் நிலவைநோக்கி பயணிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதற்கு முன்னோடியாக இந்த ராக்கெட்டை அமெரிக்கா ஏவியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT