Published : 17 Nov 2022 06:24 AM
Last Updated : 17 Nov 2022 06:24 AM

FIFA WC 2022 | இன்னும் 3 நாட்கள்: சுவாரஸ்யங்கள்...

1.73 லட்சம் ரசிகர்கள் படை… 1950ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் - உருகுவே அணிகள் மோதின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 1,73,850 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அளவிலான ரசிகர்கள் பார்வையிட்ட போட்டி இதுதான். எனினும் இந்த ஆட்டத்தை சுமார் 199,854 முதல் 2 லட்சம் பேர் வரை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிரேசில் தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் பலர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

அதிக வெற்றிகளை குவித்த பீலே: உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையை பிரேசில் ஜாம்பவான் பீலே பெற்றுள்ளார். பீலே தனது முதல் உலகக் கோப்பையை 1958ல் ஸ்வீடனில் வென்றார், இது பிரேசிலின் முதல் வெற்றி கோப்பையாகும். பின்னர் 1962ல் பிரேசில் வெற்றிபெற உதவினார், இறுதியாக 1970ல் தனது அணியை வெற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார், அதுவே அவரது இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.

கோல்களின் மன்னன்... உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் பெற்றுள்ளார். மிரோஸ்லாவ் க்ளோஸ் 16 கோல்கள் அடித்து பிரேசிலின் ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். அவர் 2002ல் தனது அறிமுக சீசனில் ஐந்து கோல்களை அடித்தார், பின்னர் 2006 போட்டியில் மீண்டும் ஐந்து கோல்களை அடித்தார், அதற்காக அவர் கோல்டன் பூட் விருது வென்றார். பின்னர் 2010ம் ஆண்டு 4 கோல்களும், 2014 சீசனில் 2 கோல்களும் அடித்தார்.

ஒரே தொடரில் 13 கோல்கள்…. உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் தொடரில் அதிக கோல்கள் அடித்த சாதனை பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் வசம் உள்ளது. 1958ம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற தொடரில் ஜஸ்ட் ஃபோன்டைன் 13 கோல்கள் அடித்தார்.

3.2 பில்லியன் பார்வையாளர்கள்… 21வது பதிப்பான 2018 உலகக் கோப்பை தொடரை3.2 பில்லியன் மக்கள் பார்வையிடட்னர். ஏறக்குறைய உலக மக்கள்தொகையில் பாதி பேர் போட்டிகளைப் பார்த்ததால் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கண்டுகளித்த தொடர் என்ற சாதனையை படைத்தது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்,டிவியில் போட்டிகளைப் பார்த்தவர்கள் இந்த எண்ணில் அடங்குவர்.

முதலும் கடைசியும்… முதல் உலகக் கோப்பையை1930ம் ஆண்டு உருகுவே நடத்தியது. அந்தத் தொடரில் உருகுவே மகுடமும் சூடியது. ஆனால் அதுவே அந்த அணி வென்ற கடைசி உலகக் கோப்பையாகவும் அமைந்தது. அதன் பின்னர் இதுவரை அந்த அணி அரியணை ஏறவில்லை.

இணைந்த கைகள்… 2002 ம் ஆண்டு உலகக் கோப்பை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளால் இணைந்து நடத்தப்பட்ட முதல் போட்டியாகும். ஆரம்பத்தில், தென் கொரியா, ஜப்பான் இரண்டும் தனித்தனியாக போட்டியை நடத்த உரிமை கோரின. மேலும் போட்டியை இணைந்து நடத்தும் யோசனையை ஜப்பான் முதலில் நிராகரித்தது. இருப்பினும் அதன் பின்னர் ஜப்பான் மனதை மாற்றிக்கொண்டு தென் கொரியாவுடன் இணைந்து வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்தது.

வயதான கோல் கீப்பர்.. உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையை எகிப்தின் எஸ்ஸாம் எல் ஹடாரி பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கோல்கீப்பரான எஸ்ஸாம் எல் ஹடாரி 45 வயதில் விளையாடினார். சவூதி அரேபியாவுக்கு எதிரான பெனால்டி ஷாட்டை அவர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் பெனால்டி ஷாட்டை கோல் விழ விடாமல் தடுத்த மூத்த வீரர் என்ற விருதையும் அவர் பெற்றார்.

அதிவேக கோல்… 2002-ம் ஆண்டு துருக்கியின் ஹக்கன் சுகுர் அடித்த கோல் உலகக் கோப்பையில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோலாக உள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் கோலை 10.89 விநாடிகளில் அடித்திருந்தார் ஹக்கன் சுகுர்.

கோப்யை தேடிக்கொடுத்த ‘பிக்கிள்ஸ்’ 1966 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள மெதடிஸ்ட் சென்ட்ரல் ஹாலில் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது. ஒரு திருடன் மர்மமான முறையில் பாதுகாப்பை மீறி கோப்பையுடன் தப்பிச் சென்றான். பின்னர் அது ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள புதருக்கு அடியில் கிடந்ததை பிக்கிள்ஸ் என்று பெயரிடப்பட்ட நாய் கண்டுபிடித்தது.

தோல்வியும் மெக்சிகோவும்.. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்தது மெக்சிகோ அணிதான். அந்த அணி தொடரில் அறிமுகமான ஆண்டில் இருந்து இதுவரை 25 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. தொடர்ச்சியாக இரு மகுடம் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை இத்தாலி, பிரேசில் பெற்றுள்ளன. இத்தாலி 1934 மற்றும் 1938ல் அடுத்தடுத்து பட்டம் வென்றிருந்தது. அதேவேளையில் பிரேசில் 1958, 1962ல் மகுடம் சூடியிருந்தது.

இறுதிப் போட்டி எதிராளிகள்... உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் மற்ற அணிகளை காட்டினாலும் நேருக்கு நேர் அதிக முறை மோதிய பெருமையை அர்ஜெண்டினா, ஜெர்மனி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் 1986, 1990 மற்றும் 2014ம் ஆண்டு இறுதிப் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி உள்ளன.

ஒரே ஒரு ஆட்டத்தில் இந்தோனேஷியா: உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அணி இந்தோனேஷியா மட்டுமே. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தோனேஷியா 1938 ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் டச்சு ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரில் உலகக் கோப்பையில் அறிமுகமானது. ஹங்கேரிக்கு எதிராக விளையாடிய அவர்கள் 6-0 என்ற கோல் கணக்கில் தோற்றனர். அதன் பின்னர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்தோனேஷியா களம் காணவில்லை.

‘கொள்கலன்கள்’ ஸ்டேடியம்: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 8 மைதானங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் தோகாவில் ‘மைதானம் 974’ என்ற ஸ்டேடியம் அமைந்துள்ளது. தோகாவின் கடற்பகுதியில் 974 ஷிப்பிங் கொள்கலன்களால் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த மைதானம் முற்றிலும் அகற்றப்படும். இந்த வகையில் உலகக்கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முதல் மைதானம் இதுதான்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x